Monday, May 29, 2023

அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்...!!

தினம் ஒரு திருத்தலம்...

உக்கிர நிலையில் சிவன்...

தினந்தோறும் அன்னாபிஷேகம்...!!

அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்...!!

https://chat.whatsapp.com/I4YqxWuLJH0Ai0cPRGx6S1

 
அமைவிடம் :

நஞ்சன்கூடு நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்குள்ள முக்கிய அம்சமான நஞ்சுண்டேஸ்வரர் கோயிலை தரிசிப்பது முக்கியமாகும். இது ஸ்ரீகண்டேஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். சிவபெருமானுக்கான கோயிலான இக்கோயில் திராவிட சிற்பக்கலை பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. புராணக்கதைகளின்படி யுகம் யுகமாக சிவபெருமான் இந்த திருத்தலத்தில் உறைவதாக நம்பப்படுகிறது.

மாவட்டம் :

அருள்மிகு ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு, மைசூரு, கர்நாடக மாநிலம்.

எப்படி செல்வது?

பெங்களூர் மற்றும் மைசூரிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில். சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் எளிதில் அடையும்படியாக இத்தலம் அமைந்துள்ளது.

கோயில் சிறப்பு :

இந்தக் கோவிலில் இருக்கும் வீரபத்திரர் சுவாமி மிகவும் புகழ்பெற்ற மூர்த்தியாக திகழ்கின்றார். இவரின் கைகளில் வில், அம்பு, கத்தி மற்றும் தண்டு இவைகளை ஏந்தி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். இந்த வீரபத்திரர் சுவாமியுடன் பத்திரகாளி அம்மன் தான் இருக்க வேண்டும். ஆனால் மாறாக தாட்சாயினி இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று.

இந்த கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாவிக்கும் நஞ்சுண்டேஸ்வரர் சுயம்பு லிங்கமாக தோன்றியவர். இங்கு மூலவராக இருக்கும் சிவலிங்கத்தின் மீது பரசுராமரால் வெட்டப்பட்ட கோடு இருக்கின்றது.

அனைத்து சிவன் கோவில்களிலும் சிவனுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் இந்த கோவிலில் இருக்கும் லிங்கத்திற்கு தினந்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. விஷத்தன்மை கொண்ட அசுரன் ஒருவனை விழுங்கிய காரணத்தால் சிவன் இங்கு உக்கிரமான நிலையில் இருப்பதாகவும், அந்த உக்கிரத்தை தணிக்க தினந்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இங்குள்ள யோக தட்சிணாமூர்த்தி, 14 சீடர்களுடன் காட்சி தருவது விசேஷம். இவரது பீடத்திலும் நந்தியும் இருக்கிறது.

இத்தலத்து சிவன், ஈசானிய (வடகிழக்கு) திசையை பார்த்திருப்பதாக ஐதீகம். எனவே நந்தி, இவரது பார்வையில் படும்படியாக வடகிழக்காக சற்றே விலகியிருக்கிறது. இங்குள்ள கோபுரமே லிங்கமாக கருதப்படுவதால், கோயிலுக்கு வெளியிலும் ஒரு நந்தி இருக்கிறது.

சிவனின் விசேஷமான 24 மூர்த்தங்கள், திப்பு சுல்தான் பிரதிஷ்டை செய்த மரகத லிங்கம், வெண்ணெய் கணபதி, நாகத்தின் மத்தியில் சுப்பிரமணியர், நின்ற கோலத்தில் சண்டிகேஸ்வரர், பத்மாசனத்தில் ஆயுதங்களுடன் நவகிரக சன்னதி ஆகியோர் இங்கு அவசியம் தரிசிக்க வேண்டியவர்கள் ஆவர்.

கோயில் திருவிழா :

கார்த்திகை, பங்குனியில் பிரம்மோற்சவம், ஆடியில் சிவன், ஆவணியில் பெருமாள் திருக்கல்யாண விழா நடைபெறுகிறது.

வேண்டுதல் :

முன்வினை பாவம் நீங்க, அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்க இவருக்கு பஞ்சாமிர்தம் மற்றும் அன்னத்தால் அபிஷேகம் செய்து, வில்வ இலை, வெற்றிலை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வேண்டிக்கொள்கின்றனர்.

விஷக்கடி பட்டவர்கள், தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள குணமாவதாக நம்பிக்கை.

நேர்த்திக்கடன் :

சிவன், அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

No comments: